Sinthanai Vattam Books

சுமைரா அன்வரின் வசந்தங்கள் வாழ்த்துச் சொல்ல எனும் நாவல் வெளியீட்டு விழா

2011 நவம்பர் 19 ம் திகதி வடமேல் மாகாண கல்வித்திணைக்களத்தின் சுபாசன மந்திரிய கேட்போர் கூடத்தில் சுமைரா அன்வரின் வசந்தங்கள் வாழ்த்துச் சொல்ல எனும் நாவல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வசந்தங்கள் வாழ்த்துச் சொல்ல நாவல் சிந்தனை வட்டத்தின் 339 வது வெளியீடாகும். இந்த விழாவினை வடமேல் மாகாண கல்விப் பணிமனை தமிழ்ப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. விழாவிற்கு வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலப் பிரிவுக்கான பிரதிக் கல்விபணிப்பளார் யூ. எம். பீ. ஜெயந்திலா தலைமை தாங்கினார். கலாபூசணம் பீ. எம். புன்னியாமீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார், பன்னூலாசிரியர் எ. எல் எம். றாசீக் உட்பட பல கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமைரா அன்வர் வடமேல் மாகாணத்தில் குருநாகலில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா நவோதயப் பாடசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் ஒருவராவார். இவர் ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுதியையும், ஒரு நாவலையும் தமிழ் இலக்கிய உலகிற்கு தந்தவர். 1980களில் இலங்கையில் தோன்றிய தமிழ் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைப் படைத்துவருபவர்.

இவரது வெளியீட்டு விழாவில் முக்கியத்துவம் என்னவெனில் இந்த விழாவினை வடமேல் மாகாண கல்விப் பணிமனையில் தமிழ்ப்பிரிவு நேரடியாக ஒழுங்கு செய்திருந்தமையாகும். தனது வலயத்திலுள்ள தமிழ்மொழி பேசும் ஓர் ஆசிரியையின் திறமையை மதித்து அந்த ஆசிரியையை கௌரவிக்குமுகமாக அந்த ஆசிரியையினால் எழுதப்பட்ட ஒரு நூலினை வெளியிட கல்வித்திணைக்களம் நேரடியாக முன் வந்த நிகழ்வானது ஒரு எடுத்துக்காட்டான நிகழ்வாகும்.

நாடாளாவிய ரீதியில் பாடசாலையில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் அவ்வப்போது சில இலக்கிய நூல்களை வெளியிட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். இத்தகு விழாக்களில் தமது வலய கல்வி அதிகாரி ஒருவரை ஒரு சிறப்பு விருந்தினராகக் கூட அழைப்பதற்கு சிரமங்கள் படவேண்டியிருப்பது அனுபவப்பட்டவர்கள் நன்கு உணர்ந்திருப்பர். இத்தகையதோர் நிலையில் வடமேல் மாகாண தமிழ் கல்விப் பிரிவின் இந்த முன்மாதிரியான எடுத்துக்காட்டு வியக்கத்தகு முறையில் அமைந்திருந்ததுடன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜி.ஜி.என். திலக்கரத்ன மற்றும் தமிழ்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் யு.எம்.பி. ஜெயந்திரா ஆகியோர் தமிழ் இலக்கிய உலகால் மதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

இந்த விழாவினை ஏற்பாடு செய்தது மாத்திரமல்லாமல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜெயந்திரா முதல் பிரதியைப் பெற்று நூலாசிரியை கௌரவப்படுத்தினார். மேலும், இவ்விழாவில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஜி.என். திலக்கரத்ன, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ. இஸ்தார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம். நஸீர் போன்ற கல்வி அதிகாரிகள் இவ்விழாவில் சிறப்புப் பிரதிகளைப் பெற அழைக்கப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகக் காணப்பட்டது.

 இந்த விழாவில் பெருந்திரளான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுள் அதிகமானோர் அசிரியர்களாகவும், ஆசிரிய ஆலோசகர்களாகவும் மற்றும் மாணவ மாணவிகளாகவும் இருந்தமை குறிப்பிடக்கூடிய வகையில் இருந்தது. இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவொரு மகத்தான பதிவாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

இந்த விழாவினை ஒழுங்குசெய்த வடமேல் கல்வித் திணைக்கள மாகாணக் கல்விப் பணிப்பளார் ஜி.ஜி.என். திலக்கரத்ன அவர்களுக்கும், ஜெயந்திரா அவர்களுக்கும் இந்த முன்மாதிரியான நிகழ்வினை நிகழ்த்தியமைக்காக தமிழ் இலக்கிய உலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.