ஓலியலை: 11.02.2007
இன்று தமிழகத்துக்கு அப்பால் தமிழ் இலக்கியங்கள் ஈழத்துத் தமிழர்களால் நகர்த்திச் செல்லப்படுவதை பெருமையுடன் நாம் கூறிக்கொள்ள முடிகின்றது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சிந்தனை வளமும் நிதி வளமும் புகலிட நாடுகளில் எங்களிடையே மலிந்திருப்பதால் இன்று ஈழத்துத் தமிழர்கள் இலக்கியத்துறையிலும், வெளியீட்டுத் துறையிலும் முன்னெப்போதுமில்லாத வகையில் பங்கெடுத்து முன்னேறிச் சென்றுள்ளனர்.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய அமெரிக்க மிசனரிகளால் எமக்காக மேற்கொள்ளப்பட்ட அகராதிக்கலை இன்று புதிய பரிமாணம் ஒன்றைப் பெற்று ஈழத்தமிழர்களினால் முன்னெடுத்துச் செல்லப்படுவதை தமிழகத்தில் மட்டுமல்ல, பிரான்ஸ், ஜேர்மன், நாடுகளிலும் கண்டு விட்டோம்.
இத்தகைய வர்த்தக வழிகாட்டிகள், பஞ்சாங்கங்கள், உலகெங்கும் செழித்து வாழும் ஈழத்தமிழரின் வணிகத் தொடர்புகளுக்கு மட்டுமல்லாது தமிழரின் அன்றாட சமூக கலாசாரத் தொடர்புகளுக்கும் உதவும் வகையில் வெளிவருகின்றன. இதை நான் கூறும் வேளையில் அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வரதரின் பலகுறிப்பு என்ற வழிகாட்டி நினைவில் வந்து மறைகின்றது. கொக்குவில் இரகுநாதையரின் வாக்கிய பஞ்சாங்கமும், மற்றும் திருக்கணித பஞ்சாங்கமும் நீண்டகாலமாக வெளிவரும் ஆண்டு நூல்களாகும். இலங்கையின் பிரம்மாண்டமான உசாத்துணைப் படைப்பான பேர்குசன் டிரெக்டரி லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தினால் 180 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. பொதுக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் தமிழ்க் கலைக்களஞ்சியம் தமிழகத்திலிருந்து 10 தொகுதிகளில் மதுரைத் தமிழ் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது நினைவில் இருக்கின்றது. இலங்கையில் இருந்து அத்தகைய பொதுக்கலைக்களஞ்சியங்கள் எதுவும் வெளிவரவில்லையாயினும் இந்துசமயக் கலைக்களஞ்சியம் பல தொகுதிகளாக, கொழும்பு, இந்து சமய இந்து விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டு வருகின்றது. கடந்த 2000ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பதிவு செய்யும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நூல்தேட்டம் என்ற நூல்விபரப்பட்டியல் வெளியீட்டு முயற்சியையும் இங்கே குறிப்பிடலாம்;.
இந்த வகையில் மேற்கூறிய உசாத்துணை நூல்களின் இருப்புப் பற்றிய தகவல்களின் பின்னணியில் முக்கியமான வரலாற்றுத் தேவை ஒன்றினை இன்றைய தினம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
உசாத்துணை வழிகாட்டிகளின் வரிசையில் Who’s Who என்ற ஒரு வழிகாட்டி உள்ளது. இவ்வழிகாட்டி தனிநபர்களைப் பற்றிய குறிப்புக்களைத் தருவதாகும். இதைத் தமிழில் யார் எவர் என்று அழைக்கின்றோம்.
நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974இல் நடைபெற்ற போது அந்த மாநாட்டின் பேராளர்கள் பற்றிய விபரத்தை அவர்களின் புகைப்படம், அவரது சமூக, வாழ்க்கைக் குறிப்புகள், கல்வித்தகைமை, அவரது துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, வகித்த பதவி, எழுதிய நூல்கள் என்று இன்னோரன்ன பல தகவல்களை அந்த யார் எவர் நூல் கொண்டிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த ஆவணம் தவிர காலத்துக்குக் காலம் பல யார் எவர் நூல்களை அவ்வப்போது பலரும் தொகுத்து வெளியிட்டிருந்தார்கள்.
ஈழத்தமிழர் யார் எவர் என்ற மற்றொரு சிறு நூலும் என்னைக் கவர்ந்தது. அதில் வர்த்தகத்துறையில் இலங்கையிலும் இந்தியாவிலும் பரிணமித்த ஈழத்தமிழர் பற்றிய ஒரு சிறு நூலாக 80களில் தமிழகத்தில் வெளிவந்திருந்தது. யார் எவர் வழிகாட்டிகள் துறைசார் ஆவணங்களாகப் பல வெளிவந்திருக்கின்றன. தமிழகச் சினிமாவில் யார் எவர் என்றொரு நூல் தமிழக சினிமா நட்சத்திரங்களினதும் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களினதும் விபரங்களுடன் வெள்வந்திருந்ததை ஒரு கண்காட்சியில் அண்மையில் காணமுடிந்தது.
கடந்த சில வருடங்களாக கொழும்புத் தமிழ்ச்சங்கம் இத்தகையதொரு எழுத்தாளர் விபரப்பதிவேடொன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. புகலிட நாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் பலர் தமது விபரங்களை அனுப்பியிருந்தார்கள். இத்தொகுப்பு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கணனியில் நீண்ட காலமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இது நூலுருவில் வெளியிடப்படும் சாத்தியம் பற்றி அறியமுடியவில்லை.
கோலாலம்பூரிலுள்ள மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 1959இல் தோற்றுவிக்கப்பட்டது. 1967ம் ஆண்டில் அது ஒரு நூலை வெளியிட்டிருந்தது. மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்நூலில் 225 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இருப்பவர்களும், மறைந்துவிட்டவர்களுமான அந்த 225 பேரும் ஏதோ ஒரு வகையில் மலேசிய இலக்கியத்துறைக்கும், எழுத்துத் துறைக்கும் தம் பங்கை வழங்கியவர்களாவர். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2004ம் ஆண்டு 350 எழுத்தாளர்களின் விபரங்கள் புகைப்படங்களுடன் கூடியதாக எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரனின் முயற்சியின் பயனாக வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தாளர்களின் பிறந்த திகதி, புனைபெயர், முகவரி, தொழில், அவர்களது இலக்கியப்பணியின் ஆரம்பம், முக்கிய திருப்புமுனைகள், வெளிவந்த படைப்புகள், பெற்ற விருதுகள் என மிகச்சுருக்கமாக இப்பதிவுகள் 250 பக்கங்களில் அமைந்துள்ளன.
எம்மவர்கள் என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு யார் எவர் உசாத்துணை நூலும் 2004இல் வெளிவந்திருந்தது. ஈழத்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் தொகுத்து, மெல்பேர்ண் நகரில் உள்ள முகுந்தன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இந்நூலில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், ஒலிபரப்பாளர்களின் விபரங்கள் திரட்டித் தரப்பட்டிருந்தன.
சிங்கப்பூரில் தமிழர்களும் தமிழும் என்றொரு பாரிய நூல் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது. கவிஞர் செவ்வியன் என்ற தமிழக இலக்கியவாதி தான் சிங்கப்பூர் சென்று வந்தபின்னர் சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறும், அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப்போக்குகளும் பதிவுக்குட்படுத்தப்படவேண்டும் என்ற ஆர்வத்தால் 664 பக்கத்தில் ஒரு நூலை எழுதி சென்னை கோதை பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இதில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் வரலாற்றுக் குறிப்புகள் ஏராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இது யார் எவர் வகையைச் சாராதபோதிலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களைத் தரக்கூடிய ஒரே நூல் இதுவென்று கருதியதால் இங்கு குறிப்பிடவிரும்பினேன்.
இலங்கையில் மலையக வெளியீட்டகத்தின் தாபகர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் மலையக எழுத்தாளர்களின் சுயவிபரப் பட்டியல் ஒன்றினை முகமும் முகவரியும் என்ற தலைப்பில் தொகுத்திருந்தார். கண்டி: மத்திய மாகாண செயலகத்தின் இந்து கலாச்சார அமைச்சு, இந்நூலை டிசம்பர் 1997இல் வெளியிட்டிருந்தது. 68 பக்கம் கொண்ட இச்சிறு நூலில் 68 மலையக எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. புகைப்படங்களுடன் கூடிய இத்தொகுப்பில், எழுத்தாளர்களின் பெயர்கள், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், முக்கிய படைப்பு, சிறு குறிப்பு, முகவரி ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியிருந்தன.
நுண்கலைகளுடன் தொடர்பான கலைஞர்களின் நூலாக்கங்கள், கௌரவிப்புகள், அரங்கேற்ற நிகழ்வுகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், கலைமன்றங்கள் ஆகியவை உள்ளிட்ட சுமார் ஆயிரத்தி ஐநூறு தகவல்களை உள்ளடக்கிய நூலொன்று சிலகாலத்திற்கு முன்னதாக தாயகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்நூல் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.சிவானந்தராஜா அவர்களால் ஏப்ரல் 2004இல் யாழ்ப்பாணத்திலிருந்து வரதர் வெளியீடாக வெளிவந்துள்ளது. 225 பக்கம் கொண்ட இந்நூலில் ஈழத்துக் கலைத்துறை தொடர்பான கலைஞர் கௌரவிப்புக்கள், நூல்கள், விஷேட மலர்கள், அமரத்துவமடைந்த கலைஞர்கள், கலைத்துறை ஆக்கங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
யார் எவர் என்ற வகை அகராதியாக அமையாது, ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள் என்ற இந்நூலில் ஏழு பிரிவுகளாக வகைப்படுத்திக் கலைத்துறைத் தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. கலையாக்கங்கள் என்ற முதலாவது பிரிவில் இசை நாடகங்களும் கூத்துக்களும், தமிழிசையும் கர்நாடக சங்கீதமும, கிராமிய சாஸ்திரீய நடனங்கள், நாடகங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பாரம்பரிய இசை ஆகிய அம்சங்கள் உப தலைப்புக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, சிற்பங்கள் என்ற பகுதியில் தேர்ச் சிற்பங்கள் என்ற பிரிவில் கி.பி.1782 இலிருந்து 2003வரை ஈழத்தின் முக்கியமான சமயத் தலங்களிலே செய்யப்பட்ட தேர்கள், அவற்றை ஆக்கிய ஸ்தபதிகள் பற்றிய விபரங்கள் என்பன தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலையாக்கம் பற்றி எழுதப்படும் போதும் அதனை ஆக்கியவர்கள் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் பற்றியும் ஆசிரியர் கூறிச் செல்வது அவருக்கு இத்துறையில் உள்ள பரந்த ஆய்வறிவைக் காட்டுகின்றது. “பொது” என்ற இரண்டாவது பிரிவில் கலைஞர்கள் கௌரவிக்கப்படுதல், ஈழத்துச் சஞ்சிகைகளில் கலைஞர்கள் ஆகிய இரு உப பிரிவுகள் காணப்படுகின்றன. அமரத்துவமடைந்த கலைஞர்கள் என்ற பகுதி மூன்றாவது பிரிவாகவும், கலைத்துறைப் பதிவுகள் நான்காவது பிரிவாகவும் இடம்பெற்றுள்ளன.
காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் என்ற பெயரில் 650 பக்கங்கள் கொண்ட யார் எவர் நூலொன்றை பாரிசிலிருந்து வண்ணை தெய்வம் வெளியிட்டிருந்தார்.
சென்னை மணிமேகலை பிரசுரத்தினரால் 2005இன் இறுதிப்பகுதியில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் இன்று சிதறி வாழும் பல படைப்பிலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்துவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. மிகுந்த பிரயாசையுடன் வண்ணைதெய்வம் தேடித்தொகுத்துள்ள இப்பாரிய முயற்சியில் சில பிரபல்யங்கள் விடுபட்டுப் போயிருந்தாலும்கூட எவ்விதத்திலும் அதைக் குறையாக எடுக்க முடியாது. இத்தகைய ஆவணவாக்க முயற்சிகள் ஏராளமான ஆட்பல, நிதி வசதியுடனும், நிறுவனமயப்படுத்தப்பட்டுமே உலகெங்கும் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை காலத்துக்குக் காலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டும் மெருகூட்டப்படுகின்றன. முதற்பதிப்பு வெளிவந்த நாள் முதல் காலத்துக்குக் காலம் புதுக்கிய மறுபதிப்புகளைக் கண்டு பூரணத்தை நோக்கிய பாதையில் வெற்றிகரமாக பயணிக்கும் மேலைத்தேய Biographical Directories எனப்படும் இத்தன்மையான யார் எவர் உசாத்துணை ஆவணங்களுடன் தனிநபர் முயற்சியாக சுயமுதலீட்டில் மேற்கொள்ளப்படும் இத்தகைய அரிய தொகுப்புக்களை ஒப்பிட்டு நோக்குதல் பொருத்தமாக இருக்காது.
காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் என்ற இந்நூலில் ஆங்காங்கே ஏராளமான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டுரைகளுக்கும், தகவல்களுக்கும் இடையே பொருத்தமாக அவை தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. இவை இந்த நூலுக்கு மேலும் கனதியைக் கொடுத்துள்ளன. பொருளடக்கத்தில் மூன்று பாகங்களாகத் தன் தரவுகளை வண்ணை தெய்வம் அவர்கள் பிரித்துத் தந்துள்ளார். பாகம் ஒன்று யாழ்ப்பாணம் என்ற தலைப்பின்கீழ் 11 கட்டுரைகளில் தகவல்களைத் தொகுத்துத் தருகின்றது. இரண்டாம் பாகம் கலைஞர்கள் என்ற தலைப்புக்குள் 131 கலைஞர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. தனித்தனிப் பெயர்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தகவல்கள் இவை. மூன்றாம் பாகத்தில் எழுத்தாளர்கள் பற்றிய 131 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொருளடக்கத்தில் அறியமுடிகின்றது. இப்பிரிவில் 131 எழுத்தாளர்களின் விபரங்கள் தரப்பட்ட கையோடு 535 முதல் 545ம் பக்கங்களில் மேலும் சில எழுத்தாளர்கள் பற்றிய பொருளடக்கத்தில் காணப்படாத தகவல்களும் இடம்பெறுகின்;றன.
யார் எவர் ஆவணத் தொகுப்புக்களாகவன்றி, கட்டுரை உருவில் நமது எழுத்தாளர்களைப் பதிவுசெய்யும் நூல்கள் ஆங்காங்கே வெளிவந்தவண்ணம் உள்ளன. அவையும் எழத்தாளர்களின் இருப்பினை வரலாற்றுப்பதிவாக்கும் ஒரு முயற்சியே. அவற்றை இங்கு குறிப்பிடுவதாயின் ஒரு நீண்ட பட்டியலாக இவ்வுரை அமைந்துவிடும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக்கொள்கிறேன்.
ஜேர்மனியிலிருந்தும் அண்மையில் ஒரு நூல் வெளிவந்திருந்தது. ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் என்ற தலைப்பில் வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.ஸ்ரீ ஜீவகன், அ.புவனேந்திரன் ஆகிய நால்வரும் இணைந்து தொகுப்பாசிரியர்களாகவிருந்து ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள். ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஜுன் 2006இல் வெளிவந்துள்ள இந்நூலில், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று ஜேர்மனியில் குடியேறி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களில் கலை இலக்கியத்துறையில் தடம்பதித்துள்ள 24பேர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களது துறைசார் பணிகளும்; பதிவுக்குள்ளாகியுள்ளன. ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், என்று பல்வேறுதுறைகளிலும் புகலிடத்தில் பணியாற்றி வருபவர்கள் இவர்கள்.
கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் மலையகத்தில் கட்டுகஸ்தொட்ட பகுதியில் உள்ள உடத்தலவின்ன என்ற கிராமத்திலிருந்து பாரிய நூலியல் பணியை ஆற்றிவருகின்றார். 110 நூல்களை தனித்தும் தன் மனைவியுடனும் இணைந்து எழுதி வெளியிட்டள்ள இவர், சிந்தனை வட்டம் என்ற தனது வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் 250 நூல்கள் வரை வெளியிட்டும் உள்ளார். இவர் அண்மையில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளில் இலங்கையிலுள்ள முஸ்லீம் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பொன்றினை வெளியிட்டிருக்கின்றார். எட்டாவது தொகுதியின் தொகுப்புப்பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்.
பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் வெளியீட்டு நிறுவனமான சிந்தனை வட்டம் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு என்ற நூலின் முதலாவது தொகுதியை ஆகஸ்ட் 2004 இல் வெளியிட்டது. சிந்தனை வட்டத்தின் 189ஆவது வெளியீடாக இது வெளிவந்திருந்தது. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை முஸ்லீம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டு வந்துள்ளார். அவ்வாறு வெளிவந்த தொடரில் இடம்பெற்ற 36 பேரின் விபரம் முதலாம் பாகத்திலும், 40பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன் இரண்டாம் பாகத்ததிலும்; தொகுக்கப்பட்டுள்ளன. சிந்தனை வட்டத்தின் 200ஆவது வெளியீடாக இத்தொகுதியின் மூன்றாவது பாகம் கடந்த செப்டெம்பர் 2005இல்; வெளியிடப்பட்டிருந்தது. மூன்றாவது தொகுதியுடன் மொத்தம் 125 எழுத்தாளர்களின் விபரங்கள் கொண்ட கட்டுரைகளை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்ää ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு என்ற இத்தொகுப்பு உள்ளடக்கியிருந்த நிலையில் 2005ம் ஆண்டில் அவர் என்னுடன் தொடர்புகொண்டிருந்தார்.
புலம்பெயர்ந்துவாழும் ஈழத்த தமிழ்எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் 50 பேரின் விபரங்களைத்தாங்கிய தொகுப்பொன்றினை அடுத்ததாக வெளியிடும் ஆர்வத்தை அவர் தனது உரையாடலில் என்னிடம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான எட்டுப் பக்கம் கொண்ட தகவல் கோவை ஒன்றினையும் அவர் அச்சிட்டு ஏராளமான பிரதிகளை லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தார். இத்தொகுப்பில் இடம்பெற விரும்பும் எழுத்தாளர்கள் படிவத்தை நிரப்பி அனுப்பிவைத்து உதவும்படி அவர் பத்திரிகை வாயிலாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த முயற்சியை இலங்கையில் அவர் மேற்கொள்ளும் நிலையில் பல தமிழ் எழுத்தாளர்கள் புகலிட நாடுகளிலிருந்து இலங்கை எழுத்தாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்பினேன். காலக்கிரமத்தில் இவ்வெழுத்தாளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் தொடர்புகளை மேற்கொண்டு இலக்கியக் கருத்துப் பரிவர்த்தனையை செய்து கொள்ளவும் தமது இலக்கிய அறிவினை பரவலாக்கிக்கொள்ளவும் தமது நூல்களை இலங்கையில் பதிப்பித்து விநியோகித்துக்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும் இயலும் என்றும் நமபினேன். இந்த நோக்கத்துடன் எனக்கு திரு புன்னியாமீன் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கும் அதிகமான படிவங்களை புகலிடத்து எழுத்தாளர்களுக்கும் எழுத்தாளர் சங்கங்களுக்கும் விநியோகித்திருந்தேன்.
நான் ஐரோப்பிய நாடெங்கிலும் 125 படிவங்களை அனுப்பிவைத்திருந்த போதிலும், இதுவரை 35 எழுத்தாளர்கள் மட்டுமே இவ்விபரக்கொத்தை பொறுப்புணர்வுடன் நிரப்பி அனுப்பிவைத்திருப்பது கவலைக்குரிய விடயமாகும். தமமுடைய இலக்கிய இருப்பை தாமே முன்வந்து பதிவுசெய்யவிரும்பாமல் தமது எழுத்துக்களால் மட்டும் தம்மை இனம்காட்டமுனைந்த பலர் பற்றிய வரலாற்றை நாம் அறிவோம். அவர்களது வாழ்க்கைச் சுவடு பற்றிய பதிவே இல்லாது மறைந்து போனது வரலாறு என்பதையும் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
தமது இலக்கியப் பணிகளை பதிவுசெய்வதென்பது தற்பெருமையாகும் என்று வாழ்ந்து மறைந்த பல நல்ல எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை இன்று தேடிப்பெற்றுக் கொள்ளமுடியாது ஆய்வாளர்கள் அவலப்படுவதை தேடல் உணர்வுள்ள எவரும் புரிந்துகொள்வார்கள். தனது தாயகத்தை விட்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்து மலாயா, இந்தியா என்று வாழ்ந்த வேளையில் 60 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்ட ந.சி.கந்தையாபிள்ளை என்ற ஈழத்தமிழர் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை. அவர் பற்றிய ஒருசில விபரங்களை வைத்துத்தான் இன்றுவரை நம்மவர்கள் கட்டுரைகளை அரைத்த மாவைத் திருப்பி அரைக்கும் பாணியில் எழுதி வருகின்றார்கள்.
இன்று நாம் அனைவரும் போற்றும் ஆறுமுக நாவலரின் முகத்தைப்கூட நாம் அறியோம். அவருடைய புகைப்படம் எதுவுமே இன்றுவரை இருந்ததில்லை. திருவள்ளுவரைப் போல, கம்பனைப்போல, சைவக் கடவுளர்களைப் போல, யாரோ ஒரு ஓவியனின் கற்பனையில் மலர்ந்த உருவத்தைத்தான் இன்றும் நாம் ஆறுமுகநாவலர் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் எமது எழுத்தாளர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே இத்தகைய யார் எவர் ஆவணப்பதிவுகள் தொடர்ந்தும் வெளிவருவதை வரவேற்கின்றோம்.
இலங்கையிலிருந்து விடுக்கப்பட்ட புன்னியாமீனின் அறைகூவலுக்குச் செவிசாய்த்துத் தம் பதிவுகளை வழங்கிய 35 பேரின் விபரங்களைத் தாங்கி 174 பக்கங்களில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு நவம்பர் 2006இல் சிந்தனை வட்டத்தின் 236ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் ஒவ்வொரு எழுத்தாளர்களினது பணிகள் பற்றியும் மிக விரிவாக 4-5 பக்கங்களில் தகவல்களை வழங்கியிருப்பதும்ää எழுத்தாளர்களின் நூல்களின் முன்னட்டைப்படம், எழுத்தாளரின் புகைப்படம், (முகவரியைப் பிரசுரிக்க அனுமதியை வழங்காதவர்கள் போக மற்றையோரின்) முகவரிகள் என்று நல்லதொரு வரலாற்றுப் பதிவினை இத்தொகுப்பில் இடம்பெறச்செய்துள்ளார். வெளியிட்டது மட்டுமல்லாது தனது செலவிலேயே ஈழத்து நூலகங்களுக்கெல்லாம் அவற்றை அனுப்பியும் வைத்திருக்கின்றார். எம்மவரது பணிகள் வரலாற்றில் அழியாது நினைவுகூரப்பட இவர் ஆற்றியுள்ள சுயநலநோக்கற்ற உதவி எம்மவரால் மறக்கப்படக்கூடாததாகும்.
ஆரம்பத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களுடைய விபரங்களைத் தாங்கியே வெளிவந்திருந்த போதிலும் இன்று 8ஆவது தொகுதியைக் காணும் இந்நூல் தொடரின் பதிவுகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வரையில் பரந்துள்ளமை வரவேற்கத்தக்கதொன்றாகும். இந்த இலங்கை எழுத்தாளர்கள்ää ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு எதிர்வரும் மார்ச் மாதத்தில் லண்டனிலும், ஜேர்மனியிலும் வெளியீடுகாணவிருக்கும் இனிய செய்தியையும் நேயர்களுடன் இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இத்தொகுதியில் இடம்பெறாத பிற எழுத்தாளர்களின் விபரங்கள் தொடர்ந்தும் காலக்கிரமத்தில் தனித்தொகுதியாகப் பதிவுக்குள்ளாகும் என்றும் அறிய முடிகின்றது.
Kalai Kalasam, IBC Tamil 07.02.2007